போதைப்பொருள் பாவனையின் சடுதியான அதிகரிப்பும் - கற்றவர்களின் அசமந்தமும்.
Illicit Drug Addiction And Abuse
உயிர் ஆபத்தான மற்றும் குறுகிய காலத்திலேயே அடிமைநிலைக்கு அழைத்துச் செல்லக்கூடிய தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் எனக்கொள்ளப்படும் கஞ்சா, ஐஸ்(Methamphetamine), ஹெரோயின், கொக்கெய்ன், என்பவற்றின் பாவனை வீதம் சுமார் 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்ட இளையோரிடையே வடக்கில் அதிகரித்திருப்பதை புள்ளிவிபரங்கள் காட்டினும், பொது மக்கள் மத்தியில் அதிலும் நன்கு படித்த-பொருளாதார அடிப்படையில் மத்தியதர மற்றும் உயர்தர மக்கள் மத்தியில், சமூகம் எப்படிச் சென்றுகொண்டிருக்கிறது என்ற விழிப்புணர்வு மிகக்குறைவாக உள்ளமை சமூகச்செயற்பாட்டளர்களிற்கு ஆழ்ந்த கவலையளிக்கிறது..
அரசால் அங்கிகரிக்கபட்ட மதுபான மற்றும் புகைத்தல் பொருட்கள் கூட அடிமைநிலைக்கு இட்டுச் செல்லக்கூடிய ஆபத்தான போதைப்பெரருட்கள்தான் எனினும் ஒப்பீட்டளவில் முன் குறிப்பிட்டவைபோல மிக விரைவான பாதிப்புக்களையும் அடிமைத்தன்மையையும் - உயிர் அச்சுறுத்தல் நிலைகளையும் உருவாக்குவதில்லை - இந்தப்பழக்கங்கள் சமூகத்தால் நன்கறியப்பட்டவை என்பதால் அவற்றை அடையாளம் காணலும் கட்டுப்படுத்தலும் பெரும்பாலான சமூகங்களில் ஓரளவு எளிதானவை – அவற்றின் பயன்பாட்டுவிதம் - பயன்படுத்தும் சூழல் எனப் பல காரணிகளால் அவை இலகுவில் வேகம் எடுப்பதில்லையே தவிர – அவையும் அதிக பாவனையால் உயிர்-உடல்;-உள ரீதியான ஆபத்துக்களை உண்டு பண்ணுபவையே.
அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனைக்கு பல எதிர்விளைவுகளையும் சமூக ஊடகப் பிரச்சாரங்களையும் சமூகச் செயற்பாட்டாளர்கள் மேற்கொண்டபொழுது அவற்றிற்கு - பெரும்பாலும் பொருளாதார கல்வி அடைவு மட்ட அடிப்படையில் உள்ள உயர்- மத்தியதர மட்ட மக்களின் ஆதரவு, கருத்துப் பகிர்வு, ஈடுபாடு என்பவை மிகக்குறைவானதாக உணரப்பட்டது.(வடிவேலுவின் காமெடி மீமைப் பகிரும் அளவிற்கு இந்த விழிப்புணர்வுப் பதிவை அவர்கள் அக்கறையெடுத்து வாசிப்பதில்லை/பகிர்வதில்லை..).
நமக்கென்ன வந்தது?
போதைப்பொருள் பாவனையின் தீவிரம் பொதுவாக குறைந்த கல்வி-பொருளாதார மட்டங்களை உடைய , ஒடுக்கப்பட்ட, உடலுழைப்பை அடிப்படையாகக் கொண்டு வாழும்(Marginalized societies) சமூக மக்களிடையே காணப்படுவதால் - அது தம் மட்டத்தில் - தம் குடும்பத்தில் பாதிப்பு ஏற்படுத்தாது என்பது இவர்களது நம்பிக்கையாக இருக்கலாம்.
ஆனால் போதைப்பொருள் பாவளையாளர்களால் ஏற்படப்போகும் சமூக அமைதியின்மை தம்மையும் தம் குடும்ப உறுப்பினர்களையும் தீவிரமாகப் பாதிக்கலாம் என்பதை இவர்கள் உணரவேண்டும். யாரும் சமூகத்தில் தனியாக இல்லை. அனைவரும் ஒருவருடன் ஒருவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பின்னிப்பிணைந்துள்ளோம்.
போதைப்பொருளுக்கான பணத்திற்காக இவர்கள் ஈ:டுபடக்கூடிய வழிப்பறி, கொள்ளை, கொலை முயற்சிகளில் அப்பாவிகள் பலர் பாதிக்கப்படபோகிறார்கள். என்பதை நாட்டின் ஏனைய பாகங்களில் நடந்துவரும் சம்பவங்களை அறிந்தாவது புரிந்து கொள்ளவேண்டும்.
மேல்மாகாணம் போன்ற போதைப்பொருள் பாவனை அதிகளவிலாக உள்ள பகுதிகளில், வீட்டில் கொடியில் காயப்போட்ட துணியைக் கூட போதைப்பொருள் அடிமைகள் களவெடுத்து போய்விடுவார்கள். வீதியில் வாகனங்களை நிறுத்த முடியாது. கண்ணாடி போன்ற உதிரிப்பாகங்களை கழட்டி விற்று விடுவார்கள். இந்த நிலை வடக்கில் பல கிராமங்களில் வந்துவிட்டது.
எனவே ஒரு சங்கிலித்தொடராக இது மக்கள் அனைவரையும்தான் தாக்கும் என்பதை படித்த சமூகங்களும் உணரவேண்டும்.சமூகத்தில் உயர்நிலையில் உள்ள செல்வாக்கு மிக்க, கல்வியறிவுள்ள வழிகாட்டிகளின் துணையுடனேயே இவற்றைக் கட்டுப்படுத்தல் சாத்தியமாகும்.
கட்டுப்படுத்தவும் - ஆற்றுப்படுத்தவும் எங்களுடன் கைகோருங்கள்.
NPRI-வட- உளவியல் ஆய்வு மையம்.
தெல்லிப்பளை.
to be continued ....
(பதிப்பு விரைவில் புதுப்பிக்கப்டும்.)
Comments
Post a Comment