சத்த ஒவ்வாமை - Misophonia
குழந்தை கத்தியதால் தந்தை தற்கொலை.
உண்மைச் சம்பவம்
தனது 3 வயதுக்குழந்தை அழுத காரணத்தால் கம்பியூட்டர் பொறியியலாளரான தந்தை (35) தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். இந்த வாரம் - கொழும்பில் உள்ள ஒரு இளம் தமிழ்க்குடும்பத்தில் நடந்தது இது.
நம்ப முடிகிறதா ? குழந்தை கத்திய சாதாரண சத்தத்திற்கு த்றகொலை செய்வதா ? அப்படி யாரேனும் செய்வார்களா ?
Misophonia எனப்படும் ஒலிக்கு – அதீத எதிர்வினை ஆற்றும் உளநலக்கோளாறு எம்மில் பலரில் அவர்கள் அறியாமலே காணப்படலாம்.
குறிப்பிட்ட சில சாதாரண ஒலிகள் கூட (ஒருவர் உணவுண்ணும் சத்தம், நாய் குரைத்தல், தெருவில் வாகனங்களின் ஹோர்ன், வாகன இரைச்சல், குறித்த சில நபர்களின் அதிக சத்தமான உரையாடல் ..)ஒரு நபரில் உள,உணர்வு ரீதியான, உடலியல் ரீதியான (psychological, emotinal, physiological..)உடனடிப்பாதிப்புக்களை ஏற்படுத்தலாம்.
அந்த சமயத்தில் அவர்கள் எதிர்வினையாற்றுவது எதிர்பார்க்கவே முடியாத அளவில் கடுமையானதாக இருக்கலம்(they may get panic attacks too). ஒரு புலி உங்களை நோக்கிப் பாய்ந்தால் நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்களோ, அதுபோல ஒரு பெரும் அச்சுறுத்தல் தமக்கு ஏற்பட்டதாக அவர்கள் உணர்ந்து – எதிர்வினையாற்றுவார்கள். இந்த நோயுள்ளவர்கள் - அந்தக்கணத்தில் அதிகம் சிந்தித்துச் செயற்படுவதில்லை. உதாரணமாக சத்தம் தாங்க முடியாமல் ஒரு பொருளை எடுத்து உங்களை நோக்கி வீசவும் கூடும்.
தாக்கம் ஏற்படுத்தக்கூடிய சத்தத்தின் அளவு, அதன் மீடிறன், போன்றன ஆளாளுக்கு மாறுபடும். பொதுவான அளவுகோல்களை வைத்து பெரிய சத்தம் - சின்னச் சத்தம் என்று ஒன்றை கூறிவிட முடியாது.
xxxxxxx
மேற்படி சம்பவத்தில்
மிக மகிழ்ச்சியான குடும்பம். 3 வயதில் ஒரு பிள்ளை, மனைவி அடுத்த மகவைச் சுமந்து கொண்டிருக்கிறார். காலையில்கூட அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருந்ததை அவர்களது அயலில் குடியிருக்கும் எனது நண்பரின் குடும்பம் கண்டிருக்கிறது.
இறந்தவர் – தான் உண்ணும்போது மற்றும் வேலை செய்யும்போது தனது மகன் அழுவதை அறவே வெறுப்பவர். நான் சாப்பிடுமடபோதுதான் நீ கத்தவேண்டுமா ?"" என்று கொதிப்பவர். மற்றைய சமயங்களில் மிக அன்பானவர்.
(தான் வளர்த்த கிளி – சாப்பாடு போடாததால் தன் தூக்கத்தைக் கலைத்துக் கத்துகிறது என்பதற்காக – வெகுண்டெழுந்து கிளியையும் தூக்கி சிவரோடு அடித்து, ரி.வியையும் உடைத்து வீட்டிலுள்ளவர்கள் அதைக் கத்தாமல் பார்த்துக்கொள்வேண்டும் என்று பாடம் புகட்டிய ண்பர் ஒருவரை எனக்குத்தெரியும். அவர் வீடு அவரை இன்னும் புரிந்து கொள்ளாமையால் நரக வேதனை அனுபவித்து வருகிறார்.)
இது ஒரு உளவியல் நோய் நிலை. மிகச்சாதாரண விடயங்களிற்கு ஒருவர் பதற்றமடையும்போதும் - வழமைக்குமாறான வகையில் எதிர்வினையாற்றும்போதும் அவர் ஏதோ பிரச்சனையில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
உங்கள் அன்பிற்குரியவரிடம் இரண்டு வாரங்களிற்கு மேற்பட்ட தொடர் நடத்தை மாற்றம் அவதானிக்கப்பட்டாலே நீங்கள் உங்கள் அன்புக்கரத்தை நீட்ட வேண்டும்.- (இது மன அழுத்தமாக மாறி – கணிக்க முடியாத பல நடத்தை மாற்றங்களையும் - உள உடல் பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம்.)
மன அழுத்தத்தின் ஒரு வெளிப்பாடாகவே தற்கொலை எண்ணங்கள் அமைகின்றன. மேற்படி சம்பவத்தை (அறிந்த வகையில்) நோக்கும்போது, இறந்தவரிற்கு நீண்டகாலமாக மன அழுத்தம் இருந்திருக்கவேண்டும். (மன அழுத்தத்தின் தீவிரத் தன்மைகள் பற்றிய எனது முந்தைய கட்டுரையின் லிங் கீழே வழங்கப்பட்டுள்ளது) இந்த சத்தம் சம்பந்தமான பிரச்சனைகளை நீண்டகாலமாக அவ்வப்போது எதிர்நோக்கி-கையாள முடியாமல் - தவித்து – அதன் காரணமாக தேக்கி வைத்திருந்த கையாலாகாத்தனம்-சுய பச்சாதாபம் போன்றவற்றால் ஆன மன ஆழுத்தப் பிரவாகத்தின் ஒரு கண வெளிப்பாடாகவே தற்கொலை அமைந்திருக்கலாம்.
சத்தம் கேட்கும்போது உடலில் நோவு கூடத் தோன்றும் அது உடலில் பல இடங்களில் உணரப்பட்டு - வலி தாங்கமுடியாத நிலை கூட வரும். மூளையால் - இல்லாத வலியை இருப்பதாக உணரவும் - இருக்கும் வலியை இல்லாததுபோல் மறக்கவும் முடியும். தூண்டல் பௌதீக ரீதியாக இல்லாமல் உளவியல் ரீதியானதாக இருப்பினும் மூளையால் அது உண்மை என கொள்ளப்பட்டால் துலங்கல் உடலியல் ரீதியாகக் கூட அமையும்.
ஒரு அழகான குடும்பம் சிதைவதற்கு – உரிய நேரத்தில் அடையாளம் காணத்தவறிய – சிறிய – மாற்றக்கூடிய உளச் சமன்பாடின்மை காரணமாக அமைந்துவிட்டது.
உளவியல் நலனிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - உளவியல் நலன் பற்றிய விழிப்புணர்வு எமது மக்கள் மத்தியில் அதிகம் ஏற்படவேண்டும். அதற்கான சிறு முயற்சிகளில் ஒன்றே இவ்வாறான சிந்தனைப்பதிவுகள்.
S.Manimaran,
Northern Psychological Research Institute
Key Words: Jaffna, Counseling, Tamil Psychological Counseling, mental health in Jaffna, mental health development in Jaffna., Free Counseling Services for Students from Jaffna. Northern Psychological Research Institute - Jaffna. Sri Lanka. Misophonia
Comments
Post a Comment